அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சி வேன் கண்ணாடி உடைப்பு, நிர்வாகிகள் 2 பேர் காயம்


அய்யாக்கண்ணுவை தாக்க முயற்சி வேன் கண்ணாடி உடைப்பு, நிர்வாகிகள் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 30 May 2018 11:15 PM GMT (Updated: 2018-05-31T02:02:02+05:30)

அரக்கோணத்தில் அய்யாக்கண்ணுவை மர்ம நபர்கள் தாக்க முயற்சித்தனர். மேலும் அவருடன் வந்த வேனின் கண்ணாடியை உடைத்தனர். இதில், வேனில் இருந்த சங்க நிர்வாகிகள் 2 பேர் காயமடைந்தனர்.

அரக்கோணம்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை வரை மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று காஞ்சீபுரத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு அரக்கோணம் வழியாக திருத்தணி செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

அரக்கோணம் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு திருத்தணி நோக்கி செல்வதற்காக அய்யாக்கண்ணு காரில் புறப்பட்ட போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென அய்யாக்கண்ணு இருந்த காரின் கதவை திறந்து தாக்க முயற்சித்தனர். அப்போது அய்யாக்கண்ணுவின் நண்பர், காரின் கதவை மூடி அவரை அனுப்பி வைத்தார். எனினும், அவரது காருக்கு பின்னால் சங்க நிர்வாகிகள் வந்த வேனை மர்ம நபர்கள் மடக்கி கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

இதன் காரணமாக வேனில் இருந்த சங்க நிர்வாகி பெரியசாமி (வயது 75), காமராஜ் (74) ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அய்யாக்கண்ணு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

மேலும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். காயமடைந்த பெரியசாமி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், “நேற்று இரவு அரக்கோணம் இந்திராகாந்தி சிலை அருகே ஒரு கடையில் இருந்து வந்த மர்ம நபர்கள், எனது கார் அருகே வந்து எந்த ஒரு விவசாயியும் அரக்கோணத்திற்குள் நுழைய கூடாது என்று கூறி என்னை தாக்க முயற்சித்தனர். எனக்கு பின்னால் வந்த வேனின் கண்ணாடியை உடைத்தனர். இதில் நிர்வாகிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதே போல் நாங்கள் பிரசாரம் செய்து வந்த பழனி, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எங்களை தாக்கி வருகின்றனர். இது ஜனநாயக நாடா? இல்லை சர்வாதிகார நாடா? என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆகவே எங்களை தாக்க முயற்சித்து எங்கள் வேனின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

Next Story