புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.600 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு


புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ரூ.600 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-31T02:02:03+05:30)

புதுச்சேரியில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.600 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு கடந்த 1–11–2017 முதல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையில் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தநிலையில் இந்தியன் வங்கி அசோசியே‌ஷன் தற்போது ஒருசில அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையொட்டி 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

அதன்படி நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. புதுச்சேரியிலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் சட்டசபை அருகே உள்ள யூகோ வங்கி அலுவலகம் முன் கூடினார்கள். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க பொறுப்பாளர்கள் முனுசாமி, கருணாகரன் (யூகோ), பிரேம்ராஜ், கருணாகரன் (எஸ்.பி.ஐ.)சுந்தரவரதன், பாலகிருஷ்ணன், திருமாறன், ரவி, கதிர்வேல், முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் புதுவையில் உள்ள 256 வங்கி கிளைகளில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் பெரும்பாலான வங்கிகள் மூடியே கிடந்தன. வேலைநிறுத்தம் நடைபெறும் 2 நாட்களிலும் ரூ.600 கோடி அளவில் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story