மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.560 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.560 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 8:32 PM GMT)

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.560 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் மே மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

இதனையொட்டி நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் சங்க தலைவர் இளஞ்செழியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சேர்ந்த ஜான்பிரிட்டோ, இந்தியன் வங்கியை சேர்ந்த பிரபு என பல்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் “ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வாரா கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் நிருபர்களிடம் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் கூறுகையில், “பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 233 வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 1330 பேர் ஈடுபட்டு உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் மட்டும் ரூ.560 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் நாளையும் (இன்று) நடைபெற உள்ளது”என்றார்.


Next Story