கீழ்பென்னாத்தூரை வறட்சி தாலுகாவாக அறிவிக்கக் கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்


கீழ்பென்னாத்தூரை வறட்சி தாலுகாவாக அறிவிக்கக் கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 8:32 PM GMT)

கீழ்பென்னாத்தூரை வறட்சி தாலுகாவாக அறிவிக்கக்கோரி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் எம்.ராமசாமி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சு.பொலக்குணம் ஆர்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் எஸ்.பி.கேசவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரன், ஒன்றிய தலைவர்கள் சுப்பிரமணி, (கீழ்பென்னாத்தூர்), பழனி (துரிஞ்சாபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அமைப்பாளர் காசி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள ஏரிகளில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக ஏரிகளை தூர்வாரி, நீர்வரத்து கால்வாய்களை சீர்படுத்தும் தடுப்பணைகளை கட்ட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் தடுப்பணை கட்டி ஆலத்தூர் வரை தண்ணீர் வருவதை கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், “பூந்தோட்ட மின் இணைப்பை இலவச மின் இணைப்பாக மாற்றித்தர உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்திய, மாநில முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கீழ்பென்னாத்தூர் தாலுகாவை வறட்சி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து கோரிக்கைகள் குறித்த மனுவை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர்.

இதில் துரிஞ்சாபுரம் ஒன்றிய அமைப்பாளர் முனியன், கீழ்பென்னாத்தூர் பெரியசாமி, கிளைத்தலைவர்கள் கார்த்திகேயன், அண்ணாதுரை, ராம்குமார் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் நன்றி கூறினார். 

Next Story