மின்னல் தாக்கி பெண் பலி செல்போன் வைத்திருந்தது காரணமா?


மின்னல் தாக்கி பெண் பலி செல்போன் வைத்திருந்தது காரணமா?
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 8:58 PM GMT)

திருவலம் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக செத்தார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

திருவலம் அருகே குகையநல்லூர் ஊராட்சி மேல்மாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வீரலட்சுமி (வயது 27). இவர் நேற்று மாலை குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் தனது குடிசை வீட்டில் இருந்தார்.

இவரது வீட்டிற்கு அருகில் தென்னை மரம் உள்ளது. இந்த பகுதியில் கரு மேகங்கள் சூழ்ந்து, இடியும், மின்னலும் அடித்தது. அப்போது வீரலட்சுமி செல்போனை தனது நெஞ்சுக்குள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தென்னை மரத்தில் திடீரென மின்னல் தாக்கியது. மேலும் குடிசை வீட்டில் செல்போன் வைத்திருந்த வீரலட்சுமியையும் மின்னல் தாக்கியது.

இதில் வீரலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காட்பாடி தாசில்தார் ஜெயந்தி மற்றும் திருவலம், மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீரலட்சுமியின் நெஞ்சுப்பகுதி வெந்துபோய் கருகிய நிலையில் இருந்தது. எனவே செல்போன் வைத்திருந்ததால் அதன் மூலம் மின்னல் தாக்கி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னல் தாக்கி பலியான வீரலட்சுமிக்கு சஞ்சீவிதா (5) என்ற மகளும், தஸ்வின் (3) என்ற மகனும் உள்ளனர்.

மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story