12-ம் வகுப்பில் 88.41 சதவீதம் பேர் தேர்ச்சி - மாணவர்களை விட மாணவிகளே அதிகம்


12-ம் வகுப்பில் 88.41 சதவீதம் பேர் தேர்ச்சி - மாணவர்களை விட மாணவிகளே அதிகம்
x
தினத்தந்தி 30 May 2018 11:15 PM GMT (Updated: 30 May 2018 10:37 PM GMT)

12-ம் வகுப்பில் 88.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 88.41 சதவீத மாணவ, மாணவியர்  தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மராட்டியம் முழுவதும் எச்.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்தது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 16 ஆயிரத்து 986 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 7 லட்சத்து 83 ஆயிரத்து 896. மாணவிகள் 6 லட்சத்து 33 ஆயிரத்து 90 ஆகும். மும்பை கல்வி மண்டலத்தை பொறுத்தவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 659 பேர் எழுதினர். இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் தேர்வு எழுதிய மொத்த மாணவ, மாணவிகளில் 12 லட்சத்து 52 ஆயிரத்து 817 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 88.41 சதவீதம் ஆகும். தேர்ச்சி பெற்றவர்களில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 125 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 84 ஆயிரத்து 692 பேர் மாணவிகள். மாணவர்கள் 85.23 சதவீதமும், மாணவிகள் 92.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிரேடு வாரியாக சிறப்பு தேர்ச்சியில் (டிஸ்டிங்ஷன்) 1 லட்சத்து 25 ஆயிரத்து 139 பேரும், முதல் கிரேடு பெற்று 5 லட்சத்து 7 ஆயிரத்து 165 பேரும், 2-வது கிரேடு பெற்று 5 லட்சத்து 67 ஆயிரத்து 853 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 52 ஆயிரத்து 660 மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொங்கன் மண்டலத்தில் அதிகபட்சமாக 94.85 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டலம் வாரியாக மும்பை- 87.44, புனே- 89.58, நாக்பூர்- 87.57, அவுரங்காபாத்- 88.74, கோலாப்பூர்- 91, அமராவதி- 88.08, நாசிக்- 86.13, லாத்தூர்- 88.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 518 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 84.30 சதவீதமும், மாணவிகள் 90.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிரேடு வாரியாக டிஸ்டிங்ஷனில் 38 ஆயிரத்து 214 மாணவர்களும், முதல் கிரேடு பெற்று 89 ஆயிரத்து 928 பேரும், 2-வது கிரேடில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 183 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 ஆயிரத்து 193 மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 66 ஆயிரத்து 456 தனித்தேர்வர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் 22 ஆயிரத்து 792 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 34.30 சதவீதம் ஆகும்.

Next Story