ஆயிரம் முறை ரத்த தானம் செய்த மனிதர்!
81 வயதாகும் ஜேம்ஸ், தன் வாழ்நாள் முழுவதையும் ரத்த தானத்துக்கே அர்ப்பணித்திருக்கிறார்.
நல்லது செய்ய வேண்டும் என்ற மனமிருந்தாலும் நிஜத்தில் அதைச் செயல்படுத்துபவர்கள் வெகு சிலரே.
அந்த வெகு சிலரில் ஒருவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முதியவர் ஜேம்ஸ் ஹாரிசன்.
தற்போது 81 வயதாகும் ஜேம்ஸ், தன் வாழ்நாள் முழுவதையும் ரத்த தானத்துக்கே அர்ப்பணித்திருக்கிறார் என்று கூறலாம்.
இவர் அளித்த ரத்த தானத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் ஏராளம். ‘தங்கக் கை மனிதர்’ என்றே இவரை அழைக்கிறார்கள்.
தனது 18 வயது முதல் தற்போது 81 வயது வரை 60 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்துவந்திருக்கும் ஜேம்சின் இளவயது வாழ்க்கை துயரம் நிறைந்தது.
1936-ம் ஆண்டு பிறந்த ஜேம்சுக்கு 14 வயதானபோது நுரையீரல் தொற்று காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 6 மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பின் ஜேம்சுக்கு 7 லிட்டர் ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக அவரது பெற்றோர் படாத பாடுபட்டனர். அப்போதுதான் ரத்தத்தின் மகிமையை ஜேம்ஸ் உணர்ந்தார். தான் 18 வயதை எட்டியவுடன் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று அப்போதே அவர் மனதுக்குள் உறுதிபூண்டார்.
அதில் ஆச்சரியமான விஷயம், ஜேம்சின் ரத்தத்தில் ‘அண்டி டி’ என்ற மருந்து தயாரிக்க உதவும் பிளாஸ்மா கலந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
ஜேம்ஸ் தனது வாழ்நாளில் மொத்தம் ஆயிரத்து 173 முறை ரத்த தானம் செய்து சாதனை படைத்திருக்கிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் உள்ள ‘அண்டி டி’ தயாரிக்க உதவும் பிளாஸ்மா மூலம் சுமார் 24 லட்சம் குழந்தை களின் உயிரை இவர் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகத்தான மனிதர்தான்!
Related Tags :
Next Story