குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது.
சாத்தான்குளம்,
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு காணப்பட்டது.
குடிநீர் பிரச்சினைசாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் பஞ்சாயத்து ஆத்திக்காடு கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உவர்ப்பாக மாறிவிட்டது. மேலும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரும் 10 நாட்களுக்கு ஒரு முறையே வழங்கப்படுகிறது. அதுவும் வீட்டிற்கு இரண்டு குடம் கூட குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால் இந்த கிராமத்து மற்ற தேவைகளுக்கு குடம் ஒன்றுக்கு ரூ.5 கொடுத்தும், சமையல் செய்வதற்கு குடம் ஒன்றுக்கு ரூ.8 கொடுத்தும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பான்மையான வீடுகளில் ரூ.35 கொடுத்து குடிநீர் கேன் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை இருக்கிறது. எனவே, இந்த கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு கொடுத்தனர்.
யூனியன் அலுவலகம் முற்றுகைஇந்த நிலையில், நேற்று காமராஜ் என்பவர் தலைமையில் ஆத்திக்காடு கிராம பொதுமக்கள் சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் 12 மணிவரை காத்திருந்தும் அதிகாரி வராததால் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியதாழை முகாமிற்கு சென்றுள்ளார் என கூறினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதிகாரி உறுதிஅப்போது அவர், அதிகாரிகள் ஆத்திக்காட்டிற்கு வருவதாகவும் பொதுமக்கள் அங்கு வந்து மனுவை தருமாறும் அவர் கூறினார். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் அலுவலகத்தில் வந்து மனுளை பெற்று நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு, பொதுமக்கள் சாத்தான்குளம் தாசில்தாரிடம் மனு கொடுப்பதாக கூறி சென்றனர். அங்கு பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில்,‘ பெரியதாழையில் ஆய்வு பணியை முடித்துவிட்டு வரும் வழியில் ஆத்திக்காட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.