மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும், வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பொதுமக்கள் சேமிப்பு பணம் பாதுகாக்கப்பட வேண்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்கக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 140 வங்கி கிளைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள், அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
வேலை நிறுத்தத்தையொட்டி விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் ரூ.250 கோடி அளவுக்கு காசோலை பரிவர்த்தனை, பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியது. அதுபோல் ஏ.டி.எம். சேவையும் முடங்கியதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story