தானியங்கி சிக்னல், வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


தானியங்கி சிக்னல், வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2018 3:30 AM IST (Updated: 1 Jun 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்க தானியங்கி சிக்னல்கள், வேகத்தடைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவு சாலை ஆகியவற்றில் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நகரின் முக்கிய சாலைகளான இவை இரண்டுமே பாதுகாப்பான பயணத்துக்கு உகந்த நிலையில் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து அதிக அளவில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. தானியங்கி சிக்னல்கள், வேகத்தடைகள், தெரு விளக்குகள் இல்லாததே விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும்.

திருவொற்றியூர் மண்டலத்தில் சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, தேரடி, பஸ் நிலையத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வாகனங்கள் செல்வது மற்றும் மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதுமான முக்கிய சந்திப்பாக எர்ணாவூர் பாரத்நகர் ரவுண்டானா பகுதி வளர்ந்து வருகிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு போக்குவரத்து நெரிசல் என்பதே இல்லை. ஆனால் தற்போது இதன் அருகே சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் துறைமுகத்துக்கு செல்லும், துறைமுகத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. மீஞ்சூர், மணலி புதுநகர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருவொற்றியூர் செல்ல நுழைவு வாயிலாகவும் பாரத் நகர் ரவுண்டானாதான் உள்ளது.

எனவே அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போது பார்த்தாலும் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியாக இது உள்ளது.

மேலும் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அசோக் லேலண்டு, பவுண்டரீஸ், விம்கோ நகரில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலைகளில் இரவு பணி முடிந்து செல்லும் பஸ்கள் எர்ணாவூர் ரவுண்டானாவில் சிக்னல்கள் ஏதும் இல்லாததால் அதிவேகத்தில் செல்கின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் இங்கு நடைபெற்றுள்ளன. எனவே இந்த பகுதியில் உடனடியாக தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும். மேலும் போதுமான போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக அங்கு பணியில் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எண்ணூர் விரைவு சாலை தற்போது இருபுறமும் அணுகு சாலைகளுடன் கூடிய ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பல இடங்களில் வாகனங்கள் உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் வழிகள் வைக்கப்பட்டு உள்ளன.

எண்ணூரில் இருந்து ராயபுரம் நோக்கிச்செல்லும் சாலையில் அமைந்துள்ள அணுகு சாலையை முற்றிலுமாக கன்டெய்னர் லாரிகள் ஆக்கிரமித்து வரிசைகட்டி நிற்கின்றன. மீதம் உள்ள பகுதியில் எவ்வித வேக தடைகளும் இல்லை. சிக்னல்களும் அமைக்கப்படவில்லை.

இதனால் கனரக வாகனங்கள் கூட மிக வேகமாக செல்கின்றன. இதனை தடுக்க ஆங்காங்கு தாற்காலிக தடுப்புகளை போலீசார் வைக்கின்றனர். இவ்வாறு திடீரென குறுக்கிடும் தடுப்புகளால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனை தவிர்க்க எண்ணூர் விரைவு சாலையில் ஒண்டிக்குப்பம், எல்லையம்மன் கோவில், திருவொற்றியூர் எரியூட்டு மயானம், ராமகிருஷ்ணா நகர் சந்திப்பு, எர்ணாவூர் ரவுண்டானா, முல்லைநகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் வேகத்தடைகளை உடனடியாக அமைக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் வைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதே சாலையில் காசிமேடு, செரியன் நகர் உள்ளிட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் குறைந்து உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

கன்டெய்னர் லாரிகள் வரிசையில் நிற்பதால் அங்கு பல இடங்களில் சாலையோர கடைகள் திடீரென முளைத்துள்ளன. மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த எர்ணாவூர் ரவுண்டானாவில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள், தர்பூசணி, குடிநீர் கேன்கள் விற்கும் சாலையோர கடைகள் அதிக அளவில் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும்.

அந்த பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் சோதனை சாவடி அமைந்திருந்தும் ஆக்கிரமிப்பாளர்களை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதாரச் சீர்கேட்டிற்கு வித்திடும் வகையிலும் உள்ள சாலையோர கடைகளை அகற்றுவதில் அக்கறையுடன் செயல்படவில்லை.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த திருவொற்றியூர் பகுதியில் விபத்துகளை தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் கூடிய சாலை பயணம் மேற்கொள்ளவும் தானியங்கி சிக்னல்கள், வேகத்தடைகள் அமைக்க தகுந்த நடவடிக்கைகளை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Next Story