தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார்? என்பதை ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும்- தொல்.திருமாவளவன் பேட்டி
தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார்? என்பதை நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருப்பூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தனின் மனைவியும், மகளிர் அணியின் மாவட்ட பொருளாளருமான விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அவருடைய உருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை திருப்பூர் காங்கேயம் ரோடு அம்பேத்கர் நகரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
சில மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் பா.ஜனதா சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெளிப்படையாக தொடர்ந்து செயல்பட்டு வருவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காலூன்ற பா.ஜனதா நினைக்கிறது. ஆளும் அ.தி.மு.க. அரசை மறைமுகமாக அச்சுறுத்தி அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கூட முதல்-அமைச்சர் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொல்கிறார். அந்த சம்பவத்தில் கூட மத்திய அரசு தலையீடு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு கேட்காமலேயே, மத்திய அரசு நாங்கள் துணை ராணுவத்தை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்று சொன்னது வலுவான சந்தேகத்துக்கு இடமளித்துள்ளது. தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவத்தை தனிநபர் கமிஷன் விசாரிக்கும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது உண்மையை வெளிக்கொண்டு வர உதவாது. தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
முதல்-அமைச்சரும், நடிகர் ரஜினிகாந்த்தும் தூத்துக்குடியில் நடந்த பேரவலத்துக்கு சமூக விரோதிகள் காரணம் என்று பொத்தாம்பொதுவாக கூறுகிறார்கள். அந்த சமூக விரோதிகள் யார்? என்பதை முதல்-அமைச்சர் விளக்க கடமைப்பட்டுள்ளார். ரஜினிகாந்த்தும் அதை விளக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
சமூகவிரோதிகள் யார்? என்பதை ரஜினிகாந்த் சொல்ல வேண்டும். தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. உரிமைக்கு போராடியவர்கள் சமூக விரோதிகளா?, மதவாத சக்திகள் சமூக விரோதிகளா?, யார் அந்த சமூக விரோதிகள் என்று தெரிந்தால் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். இவர்களெல்லாம் வன்முறைக்கு காரணமானவர்கள், இவர்களை கைது செய்யுங்கள் என்று காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். இல்லையென்றால் நடிகர் ரஜினிகாந்த் கூறியது உரிமைக்காக போராடிய மக்களை கொச்சைப்படுத்துவதாக அமையும்.
காவல்துறையினர் எத்தகைய அராஜகத்தை செய்கிறார்கள் என்பதை ரஜினிகாந்த் அறிந்துகொள்வதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் தேவைப்படலாம். இப்போது அவர் காவல்துறைக்கு வக்காலத்து வாங்கி பேசும் நிலை உள்ளது. அவர் தீவிரமான அரசியலில் ஈடுபடுகிறபோது காவல்துறையை எதிர்த்து, அரசை எதிர்த்து, ஆளும் ஆட்சியாளர்களை எதிர்த்து போராடுகிற நிலை வரும். பொறுத்திருந்து பார்ப்போம்.
சட்டமன்றத்தில் பேசுவதற்கே எதிர்க்கட்சிகளுக்கு சுதந்திரம் அளிப்பதில்லை. அதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு போவதை விட சட்டமன்றத்தை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்துகிறார்கள். தூத்துக்குடி படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டப்பூர்வமான அறிவிப்பு தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. மாதிரி சட்டமன்ற கூட்டத்தை நடத்துகிறது. சட்டமன்ற கூட்டத்துக்கு செல்லாமல் புறக்கணிக்கிறது. அந்த நிலைபாடு ஒரு போராட்ட வடிவம் என்ற காரணத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
திரைப்படத்தில் ரஜினிகாந்த் இயக்குனர் சொல்லித்தருவதைத்தான் சொல்கிறார். ‘காலா’ படத்தில் கூட ‘போராட்டம் அவசியமானது. மக்களே திரளுங்கள்’ என்று அறைகூவல் விடுப்பதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன். அரசியலிலும் யாரோ சொல்லித்தந்ததைத்தான் அவர் சொல்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. சமூக விரோதிகள் என்று யாரோ சொல்லிக்கொடுத்ததை அவர் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது. அவருடைய நிலைபாட்டை விரைவில் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு அமையும்.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதிவெறியாட்டம் நடத்திய கூலிப்படை கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனியமுதன், திருப்பூர் மண்டல அமைப்பு செயலாளர் வளவன் வாசுதேவன், வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், மாநில வணிகரணி துணை செயலாளர் தொண்டைமான், வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தாராபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தொல்.திருமாளவன் கலந்துகொண்டார்.
Related Tags :
Next Story