பால் பண்ணை அமைக்க அரசு மானியம் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் பால் பண்ணைகள் அமைக்க 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்
தமிழகத்தில் பால் பண்ணை தொழிலை வணிக நோக்கில் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறிய அளவிலான பால் பண்ணை திட்டத்தை செயல்படுத்த ரூ.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் கோட்டங்களில் தலா ஒரு பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் பால் பண்ணை அமைப்பதற்கு, சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ 300 சதுர அடி நிலம் வைத்திருக்க வேண்டும். அதேபோல் தீவனம் பயிரிட ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்பு துறையின் இதர திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது. சொந்தமாக பசு, எருமை மாடு வைத்திருக்கக் கூடாது.
இதுதவிர பயனாளியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ மத்திய அரசு பணிகள், கூட்டுறவு சங்கங்களில் பதவியில் இருக்கக் கூடாது. கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிக்க வேண்டும். இதில் பால் பண்ணை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகும். இதில் 25 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 75 சதவீதம் பயனாளியின் பங்களிப்பு ஆகும்.
இந்த திட்டத்தில் சேர்ந்து பால் பண்ணை அமைக்க விரும்பும் நபர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவரிடம் உரிய ஆவணங்களுடன் வருகிற 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் வயது, சாதி, ஆதார் எண், தொலைபேசி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story