தேவகோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து


தேவகோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து
x
தினத்தந்தி 1 Jun 2018 3:45 AM IST (Updated: 1 Jun 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து சம்பவம் ஏற்படுகிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவகோட்டை,

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தற்போது தேவகோட்டையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் வரை நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையானது தேவகோட்டை நகருக்குள் செல்லாமல் இதன் அருகே உள்ள முள்ளிக்குண்டு கிராமம் வழியாக புறவழிச்சாலையாக சென்று மாவிடுதிக்கோட்டை கிராமம் அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் சாலையுடன் இணைகிறது.

இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள புளியால் பகுதியில் இருந்து கருமொழி வரையிலும் புறவழிச்சாலை செல்கிறது.

இதற்கு இடைப்பட்ட 16 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை மிகவும் சேதமடைந்து இருப்பதால் இந்த சாலையில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

மேலும் தேவகோட்டை நகரின் பஸ் நிலையத்தில் இருந்து சிவன் கோவில் வரை ஏற்கனவே சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை மிகவும் உயரமாக போடப்பட்டுள்ளதால் நகராட்சி முன்பு மிகவும் பள்ளமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் செய்து உள்ளதால் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தேங்கி சாலையை தெரியாமல் நிற்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேவகோட்டை அருகே உள்ள முள்ளிக்குண்டு பகுதியில் இருந்து மாவிடுதிக்கோட்டை மற்றும் புளியால் பகுதியில் உடனடியாக புதிய சாலை அமைக்க வேண்டும். இதுதவிர குண்டும், குழியுமான சாலையையும், சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story