ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை


ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2018 4:15 AM IST (Updated: 1 Jun 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

உலகஅளவில் மிக நீளமான பிரகாரமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்

ராமேசுவரம் கோவில் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இங்கு உலக அளவில் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரம் அமைந்துள்ளது. அந்த பிரகாரத்தில் ஒரே மாதிரியான 1,212 தூண்கள் உள்ளது சிறப்பம்சமாகும்.

இந்த பிரகாரத்தின் வெளிப்புறநீளம் கிழக்கு,மேற்கு 690அடியும், தெற்கு வடக்காக 435 அடியும் உள்ளது. உள்புற நீளம் கிழக்கு மேற்கு 649 அடியும், தெற்கு வடக்காக 395அடியும் உள்ளது. உயரம் 22 அடி 7 அங்குலமும் உள்ளது.

இந்த பிரகாரம் முத்துராமலிங்க சேதுபதியால் 1740-1770-ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில் கட்டிடக்கலை நுணுக்கத் துடன் ஒரே மாதிரியாக தூண்கள் செதுக்கப்பட்டு நான்கு புறமும் ஒரே மாதிரியான வடிவில் அமைந்துள்ள பிரகாரம் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்து அறநிலையத்தறை மூலம் அவ்வப்போது நிதி ஒதுக்கப்பட்டு 3-ம் பிரகாரம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் மேல் பகுதியின் கற்களில் கோவிலின் தல வரலாற்று ஓவியங்கள் உள்ளிட்ட பல விதமான ஆன்மிக ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில் உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையை பெற்றுள்ள ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story