விதிமுறையை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் 283 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து


விதிமுறையை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் 283 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 1 Jun 2018 3:45 AM IST (Updated: 1 Jun 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

அரூர் பகுதியில் விதிமுறையை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 283 பேரின் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் ரத்து செய்தனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அலுவலர்கள் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 328 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

ஓட்டுனர் உரிமம் ரத்து

அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி சென்றது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பஸ்கள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கிய 83 வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் அதிக பாரம், ஆட்களை ஏற்றி வந்த வாகன டிரைவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக மொத்தம் 283 பேருக்கு 3 மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர். 

Next Story