திருத்துறைப்பூண்டி-பெருகவாழ்ந்தான் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்


திருத்துறைப்பூண்டி-பெருகவாழ்ந்தான் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2018 3:45 AM IST (Updated: 1 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

எடையூர், சங்கேந்தி வழியாக திருத்துறைப்பூண்டி-பெருகவாழ்ந்தான் இடையே மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

கோட்டூர்,

கோட்டூர் ஒன்றியம் தேவதானத்தில் தி.மு.க. ஊராட்சி கிளை கழக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி கழக செயலாளர் இளங்கோவன், மகளிர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் வின்சென்ட்சர்ச்சில், ஊராட்சி வார்டு செயலாளர்கள் பாரதி, சங்கர், ரமேஷ், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

திருத்துறைப்பூண்டியில் இருந்து எடையூர், சங்கேந்தி, தோழி, தேவதானம், செந்தாமரைக்கண் வழியாக பெருகவாழ்ந்தான் வரை அரசு பஸ் காலை, மாலை வந்து சென்றது. கடந்த 2 மாதங்களாக இந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும்.

மின்மாற்றி அமைக்க வேண்டும்

செந்தாமரைக்கண் கிராமத்தில் உள்ள மின்மாற்றி அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மின்சார வசதி இன்றி அவதிப்படுகிறார்கள். எனவே இப்பகுதிக்கு மேலும் ஒரு மின்மாற்றி அமைத்து சீரான மின்சாரம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மான நகல்களை மாவட்ட கலெக்டருக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவில் ஊராட்சி வார்டு பிரதிநிதி செல்லத்துரை நன்றி கூறினார். 

Next Story