சட்டவிரோத பண பரிமாற்ற புகார் டிகே.சிவக்குமாரின் ஆதரவாளர் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை


சட்டவிரோத பண பரிமாற்ற புகார் டிகே.சிவக்குமாரின் ஆதரவாளர் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
x
தினத்தந்தி 1 Jun 2018 4:19 AM IST (Updated: 1 Jun 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்ததற்கான ஆதாரம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

தற்போது எம்.எல்.ஏ. வாக உள்ள இவர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தார். இவருடைய தம்பி டி.கே.சுரேஷ் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யும்போது காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள் கட்சி தாவாமல் பாதுகாக்க அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை ராமநகர் மாவட்டம் மாகடி அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாதுகாத்த பெருமை டி.கே.சிவக் குமார், டி.கே.சுரேசை சேரும்.

இதைதொடர்ந்து டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் இருக்கும் வகையில் அவர்களை தனியார் சொகுசு விடுதி மற்றும் சொகுசு ஓட்டல்களில் தங்க வைத்து டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் பாதுகாத்தனர்.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி உயர்மதிப்பு கொண்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ராமநகரில் உள்ள கூட்டுறவு வங்கியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் ரத்து செய்யப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சத்துக்கு புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும், ரூ.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டு வழங்கப்பட்டதற்காக கூட்டுறவு வங்கியின் தலைமை மேலாளர் பிரகாஷ் மற்றும் சில அதிகாரிகள் போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பிரகாஷ் மீது சி.பி.ஐ. மற்றும் ஊழல் தடுப்பு படையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் டி.கே.சுரேசுக்கு ஆதரவாக வங்கி அதிகாரி பிரகாஷ் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோரின் ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் அனுமதி பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள், டி.கே.சிவக்குமாரின் முன்னாள் உதவியாளரும், டி.கே.சுரேஷ் எம்.பி.யின் நெருங்கிய ஆதரவாளருமான பத்மநாபய்யாவிற்கு சொந்தமான ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா டி.பேகூர் கிராமத்தில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

வீட்டில் இருந்த சில ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். மேலும், வீட்டில் பத்மநாபய்யா இல்லாததால் அவருடைய தந்தை பைலப்பாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பத்மநாபய்யா பற்றிய விவரங்களை அதிகாரிகள் கேட்டு அறிந்து கொண்டனர். சோதனையின் போது, 120 போலி வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மட்டும் பெங்களூரு, ராமநகரில் 5 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து மத்திய அரசு வருமானவரித் துறை, சிபி.ஐ. அதிகாரிகள் மூலம் சோதனை நடத்துவதாக அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆதவாளர்கள் வீடுகளில் நேற்று காலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக, டி.கே.சுரேஷ் அளித்த பேட்டியில், ‘எனக்கும், எனது ஆதரவாளர்களுக்கும் எதிராக சி.பி.ஐ. அதிகாரிகள் வாரண்டு பெற்று சோதனை நடத்த உள்ளனர்‘ என்று பேட்டியளித்தார். இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சி.பி.ஐ. சோதனை நடத்துவது முன்கூட்டியே எப்படி டி.கே.சுரேசுக்கு தெரியவந்தது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.

Next Story