தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி


தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 1 Jun 2018 5:20 AM IST (Updated: 1 Jun 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபர், மின்வாரிய அதிகாரி ஆகியோரிடம் ரூ.57 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

கோவை

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 50). மின்வாரிய அதிகாரி. இவருடைய மகள் தனுஷ்யா கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பினார். அப்போது ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர் சுந்தரமூர்த்திக்கு அறிமுகமானார். அவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் வேலை பார்க்கும் திம்மையா என்பவரை தனக்கு நன்றாக தெரியும், அவர் நினைத்தால் அந்த மருத்துவ கல்லூரியில் எளிதில் சீட் வாங்கி கொடுத்து விடுவார், அதற்கு பணம் செலவாகும் என கூறினார்.

இதை நம்பிய சுந்தரமூர்த்தி, சஞ்சீவ்குமாருடன் மங்களூரு சென்று திம்மையாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது திம்மையா மருத்துவகல்லூரி விண்ணப்பங்களை கொடுத்துள்ளார். அதனை பூர்த்தி செய்து கொடுத்ததும் மருத்துவ சீட் கிடைக்கும் என்றும், இதற்காக கல்லூரிக்கு நன்கொடையாக ரூ.34 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உடனே சுந்தரமூர்த்தி ஊர் திரும்பி அன்னூரில் உள்ள வங்கி மூலம் ரூ.34 லட்சத்தை அனுப்பி உள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட திம்மையா மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுக்கவில்லை. அவர் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தரமூர்த்தி இது குறித்து கர்நாடக மாநிலம் உல்லால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திம்மையா, மருத்துவகல்லூரியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் என்பதும், அவர் இதுபோன்று பலரிடம் மோசடி செய்தவர் என்றும் தெரியவந்தது. மருத்துவ கல்லூரியின் சில ஆவணங்களை எடுத்துச்சென்று மற்றவர்கள் தன்னை நம்ப வேண்டும் என்பதற்காக அதனை மோசடிக்கு பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சஞ்சீவ்குமாரும், திம்மையாவும் சேர்ந்து இதேபோல அன்னூரை சேர்ந்த தொழில் அதிபர் துரைசாமி(48) என்பவருடைய மகன் ஹரிசங்கர் என்பவருக்கு இதே மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி துரைசாமியிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து உல்லால் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சீவ்குமார், திம்மையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்தநிலையில் சுந்தரமூர்த்தி, துரைசாமி ஆகிய இருவரும் அன்னூரில் உள்ள வங்கிகள் மூலமாக திம்மையாவுக்கு பணம் அனுப்பியதால் இந்த வழக்கை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்குமாறு கர்நாடக போலீசார் வழக்கு ஆவணங்களை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘கர்நாடக மாநில போலீசார் கைது செய்த சஞ்சீவ் குமார், திம்மையா ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

Next Story