2–வது கணவருடன் தகராறு: மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை
சென்னிமலை அருகே, 2–வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார். மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னிமலை,
கரூர் மாவட்டம் ஆத்தூர் நர்மதா நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகள் உமா மகேஸ்வரி (35). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உமா மகேஸ்வரிக்கும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய மகன் யுவராஜ் (14). மகள் பூஜா (12).
சில ஆண்டுகளுக்கு முன்பு உமாமகேஸ்வரிக்கும், சுந்தர்ராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து உமாமகேஸ்வரி தன்னுடைய மகள் மற்றும் மகனை அழைத்துக்கொண்டு கரூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு வடிவேலின் வீட்டில் சக்திநாதன் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். சக்திநாதன் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் உமாமகேஸ்வரிக்கும், சக்திநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சக்தி நாதனை 2–வதாக உமாமகேஸ்வரி திருமணம் செய்து கொண்டார். பின்னர் சக்திநாதன், உமாமகேஸ்வரி, யுவராஜ், பூஜா ஆகியோருடன் சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் காந்தி நகர் பகுதிக்கு வந்து வீடு எடுத்து வசித்து வந்தார்.
இதில் யுவராஜ் சென்னிமலையில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 8–ம் வகுப்பு முடித்துவிட்டு 9–ம் வகுப்பு செல்ல இருந்தான். பூஜா அதே பள்ளிக்கூடத்தில் 6–ம் வகுப்பு முடித்துவிட்டு 7–ம் வகுப்பு செல்ல இருந்தாள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழில் யார் கையெழுத்து போடுவது என்பது குறித்து உமாமகேஸ்வரிக்கும், சக்திநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் உமாமகேஸ்வரி மனமுடைந்து இனி வாழ்வதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர் மகன் யுவராஜூக்கும், மகள் பூஜாவுக்கும் விஷத்தை கொடுத்து தானும் குடித்தார்.
இதனால் 3 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 11.30 மணி அளவில் உமாமகேஸ்வரி இறந்தார். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் யுவராஜூம் இறந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் பூஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
இதுகுறித்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2–வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.