தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் தொந்தரவு செய்யக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த வக்கீல் தங்கப்பாண்டி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–
நான் நெல்லை மாவட்ட மக்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். மே 22–ந்தேதி நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டேன். இந்த போராட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பல பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கும் பொருட்டு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் நள்ளிரவு நேரங்களில் கூட துன்புறுத்தல் செய்கின்றனர். கைக்குழந்தைகளைக்கூட துன்புறுத்துகின்றனர்.
குறிப்பாக மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்த சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களை போலீசார் மனிதாபிமானம் இன்றி விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக யாரையும் கைது செய்யக் கூடாது. துன்புறுத்தக் கூடாது. விசாரணை தொடர்பாக எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு தரக்கூடாது என உத்தரவிட்டனர்.