தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த 2 பேர் கைது
தொண்டமாங்கினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோகைமலை
தோகைமலையை அடுத்த கொசூரில் தொண்டமாங்கினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய கடன், உரம், பூச்சி மருந்து மற்றும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2014-2015-ம் ஆண்டிற்கு துறை அதிகாரிகள் மூலம் தொண்டமாங்கினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கத்தின் கணக்கு களை தணிக்கை செய்தபோது சங்கத்தில் உரங்கள், ரேஷன் பொருட்கள் விற்பனை செய்ததில் ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 179 கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த முறைகேடுகள் குறித்து குளித்தலை கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர் திருநீலகண்டன் சென்னை குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சென்னை குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போதைய கூட்டுறவு வங்கி செயலாளர் இளஞ்சியம், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பாலசுப்பிரமணியன், பிரகாஷ், முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் பொன்னம்பலம் (பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்) ஆகியோர் மீது கரூர் மாவட்ட வணிக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து செயலாளர் இளஞ்சியம், விற்பனையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள முன்னாள் செயலாளர் பொன்னம்பலம், விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொண்டமாங்கினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர், விற்பனையாளர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதி பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் மற்றும் விவசாய கடன் உள்பட அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் திருகாம்புலியூர் கூட்டுறவு சங்க செயலாளர் அண்ணாதுரை, தொண்டமாங்கினம் கூட்டுறவு சங்க பொறுப்பு செயலாளராகவும், பஞ்சப்பட்டி கூட்டுறவு சங்க அலுவலர் செல்வராஜ், தொண்டமாங்கினம் கூட்டுறவு சங்க உதவி செயலாளராகவும் கூடுதல் பொறுப்பாக பணியாற்ற குளித்தலை கூட்டுறவு சங்கங்களின் சரக துணை பதிவாளர் திருநீலகண்டன் நியமனம் செய்துள்ளார்.
Related Tags :
Next Story