வடமதுரை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி தீ வைத்து எரிப்பு


வடமதுரை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2018 3:30 AM IST (Updated: 2 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி காரில் வந்த மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர். அவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியினரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடி டாஸ்மாக் குடோனில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை அட்டைபெட்டிகளில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எரியோடு நோக்கி சென்றது. வடமதுரை அருகே உள்ள கோகுல்நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி (வயது24) என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். லாரியில் தருமத்துப்பட்டியை சேர்ந்த கிளீனர் ராஜா (28), குப்பமுத்துப்பட்டியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மோகன்ராஜ் (34) ஆகியோர் உடன் சென்றனர்.

திண்டுக்கல்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளபொம்மன்பட்டி பிரிவில் உள்ள தனியார் பள்ளி அருகே லாரி சென்றபோது இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் லாரியை வழிமறித்து நிறுத்தினர். அதன்பின்னர் லாரியில் இருந்தவர்களை விரட்டிவிட்டு பெட்ரோலை ஊற்றி லாரிக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர். லாரியில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த வழியே வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. தீப்பிடித்த லாரியின் டயர்கள் பெரும் சத்தத்துடன் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அலுவலர் சந்திரகுமார், நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் லாரியின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாயின. மேலும் லாரியில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அடங்கிய அட்டை பெட்டிகளும் தீயில் எரிந்து நாசமானது.

இதையடுத்து போலீசார், லாரி டிரைவரிடம் விசாரணை செய்தனர். அப்போது லாரிக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்ற காரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது என டிரைவர் தெரிவித்தார். எனவே டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தீ வைத்தார்களா? அல்லது வேறு நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story