மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் மனு
மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்திற்கு மதுபாட்டில்களுடன் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் கையில் மதுபான பாட்டில்களை எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு அளிக்கச் சென்றனர். அப்போது கலெக்டர் அங்கு இல்லாததால் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேனி என்.ஆர்.டி. நகரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் நலன் கருதி அந்த கடை அடைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் மதுபான கடை அமைக்க முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது. இந்த பகுதியில் பள்ளிகள், வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இங்கு மதுக்கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர். மனு அளிக்க வந்தவர்கள் மதுபான பாட்டில்களுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.