பொள்ளாச்சி அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மர்ம சாவு


பொள்ளாச்சி அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 2 Jun 2018 3:15 AM IST (Updated: 2 Jun 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். மற்றொருவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி யில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் தனியார் தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓஷா (வயது 22), என்ற வாலிபரும் பத்மாவதி (20) என்ற இளம் பெண்ணும் வேலைக்கு சேர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் இருவரும் தங்களுக்கு மயக்கம் வருவதுபோன்று இருப்பதாக சக தொழிலாளியிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த 2 பேரையும் அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பத்மாவதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஓஷாவின் உடலில் வி‌ஷப்பூச்சி கடித்ததற்கான அடையாளம் இருந்தது.

இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்மாவதி எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவருடைய மர்ம சாவு குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘ஓஷா, பத்மாவதி இருவரும் காதலர்களா? அல்லது கணவன்–மனைவியா?, அவர்கள் இருவரும் வி‌ஷம் குடித்தார்களா என்பது தெரியவில்லை. பத்மாவதி உடலை பிரேத பரிசோதனை செய்ததற்கான அறிக்கை வந்த பின்னர்தான் முழு விவரமும் தெரியவரும்’ என்றனர்.


Next Story