வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தீக்குளித்த, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி சாவு
வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தீக்குளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரங்கிப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பெரியாண்டிக்குழியை சேர்ந்தவர் குணசேகர் மகன் ஜெகன்சிங் (வயது 31). இவரது மனைவி அஞ்சு. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், ஜெயகுரு என்ற மகனும் உள்ளனர். ஜெகன்சிங் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்ட நாள் முதல் ஜெகன்சிங் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டி.வி.யில் வேல்முருகனின் பேட்டியை பார்த்தார். இதில் மேலும் மனமுடைந்த, ஜெகன்சிங் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஜெகன்சிங்கை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகன்சிங், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அஞ்சு புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிவு செய்து, ஜெகன்சிங்கின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.