தடையின்றி குடிநீர் வழங்க கோரி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலத்தில் தடையின்றி குடிநீர் வழங்க கோரி, வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் காமராஜ் நகரில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் காமராஜ் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு, காமராஜ் நகரை தவிர பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் விருத்தாசலம் நகரில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி, கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் இந்த குடிநீர் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் காமராஜர் நகர் பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தும், இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப வந்த வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், எங்களுக்கே குடிநீர் இல்லை. இங்கு வந்து ஏன் குடிநீர் எடுத்துச் செல்கிறீர்கள் என கூறியும், நகராட்சியை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி பொறியாளர் பாண்டு, செல்போன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை தொடர்பு கொண்டு, இன்னும் ஓரிரு நாட்களில் தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என்றும், தற்போது குடிநீர் கிடைக்காத பகுதிகளுக்கு வினியோகம் செய்வதற்காக வாகனத்தை விடுமாறும் கூறினார்.
அதற்கு பொதுமக்கள், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என கூறிவிட்டு, சிறை பிடித்த வாகனத்தை விடுவித்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.