கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்


கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:45 AM IST (Updated: 2 Jun 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு வந்தனர்.

தூத்துக்குடி,

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை முடிவடையும் தருவாயில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி சம்பவத்தால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாநகரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோடை விடுமுறைக்கு பிறகு திட்டமிட்டபடி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடம் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே இருந்து வந்தது.

அதே நேரத்தில் இயல்பு நிலை திரும்பியதால் அனைத்து பள்ளிக்கூடங்களும் வழக்கம் போல் திறக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

அதன்படி நேற்று காலையில் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளியில் கொண்டு சென்று விட்டனர்.

பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் நேற்று முன்தினமே வந்து தங்கினர். அவர்களும் காலையில் பள்ளிக்கூடங்களுக்கு ஆர்வத்துடன் சென்றனர். தனியார் பள்ளிக்கூடங்களில் நேற்று ஆசிரியைகள் காத்திருந்து மாணவ, மாணவிகளை வரவேற்றனர்.

மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்தும், மாணவர்களுக்கு சாக்லெட் கொடுத்தும் வரவேற்கப்பட்டனர். இதேபோன்று, பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்தினர். அரசு பள்ளிக்கூடத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.

Next Story