சீராக மின்வினியோகம் வழங்க கோரி மின் வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
சீராக மின்வினியோகம் செய்ய கோரி மூங்கில்துறைப்பட்டு மின் வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் மளிகை கடை, ஜவுளிக்கடை, மருந்து கடை, இறைச்சி கடை, உரக்கடை என பல்வேறு கடைகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்படும் மின்மாற்றி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பழுதானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் துணை மின் நிலையத்தில் இயங்கி வரும் வேறு ஒரு மின்மாற்றி மூலம் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு மின்வினியோகம் வழங்கி வந்தனர். கடந்த 10 நாட்களாக மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு குறைந்த மின்அழுத்த மின்சாரம் வருவதால், வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள மின்சாதன பொருட்கள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக ஆழ்துளை கிணறுகளின் மின் மோட்டார்கள், விவசாய மின் மோட்டார்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் திண்டாடி வருகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு சீராக மின்வினியோகம் வழங்க கோரி மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மூங்கில்துறைப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நேற்று காலை 7 மணிக்கு மூங்கில்துறைப்பட்டு இளமின் பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, சீராக மின்வினியோகம் வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் கலியமூர்த்தி, பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களாக குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால், டியூப் லைட், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்கள் இயங்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் நாங்கள் சரிவர தூங்க முடியாமல் அவதிபட்டு வருகிறோம். இதனிடையே நாள் ஒன்றுக்கு 10–க்கும் மேற்பட்ட முறை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஆகவே எங்கள் பகுதிக்கு தடையின்றி சீரான முறையில் மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை கேட்ட போலீசார், சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஓரிரு நாட்களில் தடையின்றி சீராக மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள், வணிகர்கள் காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.