நாட்டில் அதிகார போட்டி நடக்கிறது: அனைவரும் அவரவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும் நாராயணசாமி பேச்சு
நாட்டில் அதிகார போட்டி நடப்பதாகவும், அனைவரும் அவரவர் எல்லைக்குள் செயல்பட வேண்டுமெனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் ‘இந்திய அரசியமைப்பு சாசனம்’ (கவிதை வடிவில்), ‘ஒவ்வொரு குழந்தையும் ஜீனியஸ் ஆகலாம்’ என்ற தலைப்புகளில் தமிழில் புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விழாவுக்கு போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் தலைமை தாங்கினார். அவரது மனைவி கிரண் கவுதம் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
புதுவை ஏராளமான எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் உருவாக்கிய மண். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மாநில மொழியை 6 மாதத்திற்குள் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை பலர் பின்பற்றுவதில்லை. இந்த நிலையில் போலீஸ் டி.ஜி.பி. எழுதிய புத்தகங்களை கண்டு திகைத்து போய்விட்டேன். அவர், குழந்தை வளர்ப்பு குறித்து அனுபவித்து எழுதி உள்ளார். இதனை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும்.
நாட்டில் தற்போது யாருக்கும் அதிகாரம் உள்ளது என போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதிக்கா? பிரதமருக்கா? அல்லது கவர்னருக்கா? முதல்–அமைச்சருக்கா? என அதிகார போட்டி நடக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் யார்? யாருக்கு என்னனென்ன அதிகாரம் உள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே அனைவரும் அவரவர் எல்லைக்குள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.