பாளையம்புதூர் நிறுத்தத்தில் நிற்காததால் தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
பாளையம்புதூர் நிறுத்தத்தில் நிற்காததால் தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நல்லம்பள்ளி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று பயணிகள் தர்மபுரி செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி வந்தது. பயணிகள் அந்த பஸ்சை நிறுத்தினர். ஆனால் டிரைவர் பயணிகள் மீது மோதுவது போல் வந்து பஸ்சை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்றனர்.
நல்லம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் இளைஞர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாளையம்புதூர் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்ல அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் புறநகர் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது இல்லை. மேலும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் புறநகர்பஸ்களில் பயணிகளை ஏற்றுவது இல்லை. இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து இனிவரும் காலங்களில் அனைத்து புறநகர் பஸ்களும் பாளையம்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். பஸ் சிறைபிடிப்பு காரணமாக அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story