தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள்
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்களை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள்.
தர்மபுரி
கோடைவிடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் ஏற்கனவே அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடபுத்தகங்களை கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை தெரசாள் மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.
1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடபுத்தகங்கள், சீருடை உள்ளிட்டவைகள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் வழங்கினர்.
இதேபோல் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளின் நிறம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சீருடைகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பிற வகுப்புகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே உள்ள நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story