கற்பிக்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி - கலெக்டர் ராமன் தகவல்


கற்பிக்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:28 AM IST (Updated: 2 Jun 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

கற்பிக்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் ராமன் கூறினார்.

வேலூர்,

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி, வேலூர் மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. வேலூர் ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 2 ஆயிரத்து 236 பள்ளிகளில் படிக்கும் சுமார் 4 லட்சத்து 18 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பாடத்திட்ட புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் முறை மட்டுமின்றி, அதற்கு தீர்வு காணும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கற்பிக்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவ-மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் நிச்சயம் வாழ்வில் வெற்றி அடையலாம். புதிய பாடத்திட்டம் தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பான வல்லுனர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பயிலும் மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயின்று தேர்ச்சி விகிதத்தில் முதல்நிலைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வேலூர் தாசில்தார் பாலாஜி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பற்குணதேவன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story