அரசு நிதி மோசடி வழக்கில் தலைமறைவான ஊழியர்கள் 2 பேர் கைது


அரசு நிதி மோசடி வழக்கில் தலைமறைவான ஊழியர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2018 4:34 AM IST (Updated: 2 Jun 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

போலியாக சான்று தயாரித்து அரசு நிதியை மோசடி செய்த வழக்கில் தலைமறைவான வருவாய்த்துறை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த முகலவாடியில் கிராம நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள் துரைகண்ணு (வயது 60), கலையரசன். மதுராந்தகம் வட்ட வருவாய் ஆய்வாளராக இருந்தவர் தேவராஜ் (71). முகலவடி தலையாரியாக இருந்தவர் முருகேசன். 1996-ம் ஆண்டு இவர்கள் 4 பெண்களுக்கு கணவன் இறந்ததாக போலியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் தயாரித்து விதவை உதவித்தொகை மற்றும் அரசு பணம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். துரைகண்ணு, கலையரசன், தேவராஜன், முருகேசன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்திவிட்டு, 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதற்கிடையில் தலையாரி முருகேசன் 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். சென்னை ஐகோர்ட்டு முருகேசனை வழக்கில் இருந்து விடுவித்தும், மற்ற 3 பேருக்கும் தண்டனையை குறைத்து தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் 3 பேரும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மணிமேகலை மற்றும் போலீசார் அவர்களை தேடிவந்தனர். இதில் தேவராஜ் மற்றும் கலையரசனை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களுக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தண்டனையின்படி சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அதையொட்டி காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துரைகண்ணுவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Next Story