கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்து சிகிச்சை பலனின்றி மாணவி சாவு


கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்து சிகிச்சை பலனின்றி மாணவி சாவு
x
தினத்தந்தி 2 Jun 2018 4:39 AM IST (Updated: 2 Jun 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மாதா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் காலனியில் மாதா கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் 27-ந்தேதி இரவு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாதாசிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் பட்டாசுகளை வைத்து அதனை சிலர் வெடித்து கொண்டே வந்தனர். அந்த சரக்கு ஆட்டோவில் சிறுவர்களும், பெண்களும் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், ஊர்வலத்தின்போது வெடிக்கப்பட்ட ராக்கெட் வெடியானது, சற்று தூரம் மேல்நோக்கி சென்றபோது மின்வயர் மீது பட்டு மீண்டும் திரும்பி வந்து பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் விழுந்தது.

இதனால் ஆட்டோவில் இருந்த அனைத்து பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த தர்சிணி(வயது 10), தோக்கம்பூரை சேர்ந்த அர்ஜுன்(11) மற்றும் அரிஷ்பாபு உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ உரிமையாளரான தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்த தசரதன்(25), டிரைவர் அசோக் (23) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாதா கோவில் நிர்வாகிகளில் ஒருவரான முனுசாமி என்கிற ஜோசப் (43) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 5-ம் வகுப்பு மாணவியான தர்சிணி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story