பொருட்கள் வாங்குவது போல் நடித்து மளிகை கடையில் நூதன முறையில் ரூ.46 ஆயிரம் திருட்டு
முத்துப்பேட்டை அருகே பொருட்கள் வாங்குவது போல் நடித்து மளிகை கடையில் நூதன முறையில் ரூ.46 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திருடி சென்றனர்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் ஆலங்காடு கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவருடைய கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் இருபது 100 ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து அதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கேட்டுள்ளனர். அதற்கு செல்வராஜ், தான் வைத்திருந்த கைபையில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது கைபையில் அதிக பணம் இருந்ததை 2 நபர்களும் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அந்த பணத்தை திருட திட்டமிட்டு செல்வராஜின் கவனத்தை திசை திருப்ப மளிகை பொருட்கள் வாங்குவது போல ஒரு சீட்டை கொடுத்துள்ளனர். அந்த சீட்டை செல்வராஜ் வாங்கி கொண்டு பொருட்கள் எடுப்பதற்காக கடையின் உள்ளே சென்றுள்ளார். அப்போது கைபையில் இருந்த ரூ.46 ஆயிரத்தை 2 பேரும் திருடி சென்று விட்டனர்.
செல்வராஜ் திரும்பி வந்து பார்த்தபோது கைபையையும், 2 பேரையும் காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு கடையில் அரிசி வாங்குவது போல நடித்து அந்த கடையில் இருந்து தராசை திருடி செல்லும் காட்சி இடம் பெற்றிருக்கும். அதே பாணியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து மளிகை கடையில் ரூ.46 ஆயிரத்தை நூதன முறையில் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story