நன்னிலத்தில் நடந்த ஜமாபந்தியில் 83 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்


நன்னிலத்தில் நடந்த ஜமாபந்தியில் 83 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 2 Jun 2018 5:00 AM IST (Updated: 2 Jun 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலத்தில் நடந்த ஜமாபந்தியில் 83 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

நன்னிலம்

நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் நன்னிலம் வட்டம் நன்னிலம், கீழ்குடி, ஸ்ரீவாஞ்சியம், சேங்கனூர், பருத்தியூர், வீதிவிடங்கன், பூங்குளம், சலிப்பேரி, தட்டாத்திமூலை, ஆணைக்குப்பம் ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டாமாறுதல், நில அளவை, பட்டா, பெயர் மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 127 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

பின்னர் 32 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 4 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆணையும், 16 பேருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையும், 23 பேருக்கு பட்டா மாறு தலுக்கான ஆணையும், 6 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணையும், ஒருவருக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித் தொகைக்கான காசோலையும், ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையும் என மொத்தம் 83 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ரெங்கசாமி, தாசில்தார் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story