மாவட்ட செய்திகள்

சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தினரின் கதி என்ன?போலீசார் தீவிர தேடுதல் வேட்டை + "||" + Salem Corporation Female official What the fate The police are in serious search hunting

சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தினரின் கதி என்ன?போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தினரின் கதி என்ன?போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மாயமான சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தினரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி ரங்கநாயகி (வயது 56). இவர் சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையராகவும், கமிஷனரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் கிரிதரன் (28), மருமகள் பிரேமா (25). கிரிதரன் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் தங்கி அங்குள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.


இந்த நிலையில் கடந்த வாரம் கிரிதரன், பிரேமா, இவர்களுடைய ஒரு வயது பெண் குழந்தை உள்ளிட்டோர் ரங்கநாயகி வீட்டுக்கு வந்தனர். அங்கு வந்த பின்பு கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து கிரிதரன், பிரேமா, ரங்கநாயகி ஆகிய 3 பேர் இடையே தகராறு முற்றியது. இது குறித்து பிரேமாவின் பெற்றோர் ரங்கநாயகி வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையால் மோகன், ரங்கநாயகி, கிரிதரன் ஆகியோர் வாழ்க்கையில் வெறுப்படைந்துள்ளனர். கடந்த 30-ந் தேதி இரவு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். பின்னர் பிரேமா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு அன்னதானப்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே ரங்கநாயகியின் தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு ‘வாட்ஸ் அப்பில்‘ பெண் அதிகாரி குடும்பத்தினர் ஒரு தகவல் அனுப்பினர்.

அதில் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள உள்ளோம். எங்களை தொந்தரவு செய்து வரும் பிரேமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதைப்பார்த்த விஜயசெல்வி 31-ந் தேதி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோகன், ரங்கநாயகி, கிரிதரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 பேரும் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு அல்லது ஒகேனக்கல்லுக்கு சென்று இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக போலீசார் நேற்று சேலம் திரும்பி வந்தனர். அவர்களின் கதி என்ன? ஆனது என தெரியாததால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே 3 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி ரங்கநாயகி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியது. அதன்பேரில் அவருடைய வீட்டில் போலீசார் தேடியும் எந்த கடிதமும் சிக்கவில்லை. மேலும் ரங்கநாயகி மாநகராட்சிக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது உயிருடன் இருக்கிறார்களா? என்பதை அறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

‘வாட்ஸ்அப்பில்’ வெளியிட்டதால் பரபரப்பு
பெண் அதிகாரியின் மகன் கிரிதரன் ‘வாட்ஸ் அப்பில்‘ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உருக்கமாக பேசியிருப்பதாவது:- எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய, என்னுடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் நண்பர்கள், உறவினர்கள், என்னடா இப்படி செய்து விட்டாயே? என நினைக்கிறவர்களுக்கு வேறு வழியில்ல. எங்களால் வழக்கு போட்டு கொண்டு இருக்கவும் முடியாது. அதனால் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சிடுங்க.

நான் ஓசூரில் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர், பக்கத்தில் இருக்கிறவங்க எல்லோருக்குமே நாங்க அதிக சிரமம் கொடுத்து விட்டோம். வீட்டின் முன்பு வந்து மனைவி குடும்பத்தினர் சத்தம் போட்டதால் எல்லோருடைய மானம், மரியாதை போய் விட்டது. அவர்களுடைய குடும்பத்திற்கு உள்ளே நிறைய பிரச்சினை வந்து விட்டது. இனிமேல் இந்த மாதிரி நடக்காது எங்களால். இதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். ஓசூரில் எங்கள் வீட்டின் உரிமையாளருக்கும் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். எனவே அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஆசைபட்டமோ எல்லாமே முடிந்தது. அந்த ஒரு பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் எங்கள் குடும்பம் முடிந்தது. இவ்வளவு அசிங்க, அசிங்கமாக அவர்கள் பேசி அதுக்கு அப்புறம் உயிர் வாழ்வதைவிட போயிடலாம். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இந்த ‘வாட்ஸ் அப்’ வீடியோ வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.