மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது


மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 2 Jun 2018 5:16 AM IST (Updated: 2 Jun 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி அகமது லம்பு 25 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி மதிப்பில் பொதுச்சொத்துகள் சேதம் அடைந்தன.

குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட பலர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த பயங்கர தாக்குதலுக்காக திட்டமிட்டதிலும், வெடிகுண்டுகளை வைத்ததிலும் முக்கிய பங்கு வகித்தவர் அகமது லம்பு என அறியப்படுகிற அகமது ஷேக் (வயது52). குண்டுவெடிப்புக்கு பிறகு அவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

அதன்பின்னர் அவர் போலீஸ் பிடியில் சிக்கவே இல்லை. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ (சர்வதேச தேடல் அறிவிக்கை) பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவரது தலைக்கு ரூ.5 லட்சம் விலையும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அவர் குஜராத்தின் தென்பகுதியில் வல்சாட் கடற்கரை பகுதியில் பதுங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து சென்று, அகமது ஷேக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி உள்ள அவர், மும்பை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படுவார் என குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

அகமது லம்பு, நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story