முதல்-மந்திரி நடத்தும் கூட்டங்களில் அரசு அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை


முதல்-மந்திரி நடத்தும் கூட்டங்களில் அரசு அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை
x
தினத்தந்தி 2 Jun 2018 5:50 AM IST (Updated: 2 Jun 2018 5:50 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி நடத்தும் கூட்டங்களில் அரசு அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக குமாரசாமி கடந்த மே மாதம் 23-ந் தேதி பதவி ஏற்றார். காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா வருகிற 6-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அரசு அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

முதல்-மந்திரி நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் செல்போனுடன் கலந்து கொள்கிறார்கள். முக்கியமான விஷயங்கள் குறித்து ஆய்வு நடைபெறும்போது, சிலர் செல்போனை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இதனால் அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் படும் முக்கியமான விஷயங்களை அதிகாரிகள் கவனிக்க தவறுகிறார்கள். இதை நான் பல முறை கண்டேன்.

அதனால் இனிமேல் முதல்-மந்திரி நடத்தும் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரிகள் தங்களின் செல்போனை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவற்றை எடுத்து வந்துவிட்டால், கூட்டம் நடத்தும் அதிகாரியிடம் அதை கொடுத்துவிட வேண்டும்.

கூட்டத்தில் முக்கியமான விஷயங்கள் பற்றி ஆய்வு நடைபெறும்போது, அனைவரும் அதை கவனிக்க வேண்டும் என்பது தான் இந்த உத்தரவின் நோக்கம். இதை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story