மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக செயல்படமாட்டார்கள் சித்தராமையா நம்பிக்கை


மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக செயல்படமாட்டார்கள் சித்தராமையா நம்பிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2018 5:55 AM IST (Updated: 2 Jun 2018 5:55 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பெங்களூருவில் நேற்று இலாகா பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவராக காங்கிரஸ் மேலிடம் என்னை நியமித்துள்ளது. இதற்காக எங்கள் கட்சி மேலிட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு கட்சிகளும் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும், எந்த கருத்து வேறுபாடும் வராமல் பார்த்துக்கொள்ள இந்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது 2 தடவையோ அல்லது தேவைப்படும்போதோ கூடி ஆலோசனை நடத்தும். மாநில மக்களின் நலனுக்காக இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அமல்படுத்த குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்படும். இலாகாக்களை பெறுவதில் ஜனதா தளம்(எஸ்) கட்சி முன்னிலை பெற்றுவிட்டதாக சொல்வது சரியல்ல.

இரு கட்சிகளின் தலைவர்களுடன் ஒன்று கூடி ஆலோசித்த பிறகே இலாகாக்களை பகிர்ந்து கொண்டுள்ளோம். காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக திரும்புவார்கள் என்று கூறுவது வெறும் வதந்தி ஆகும். யாரும் கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டார்கள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார். 

Next Story