திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: 108 ஆம்புலன்சை இயக்கியபோது கையோடு வந்த ‘கியர்’
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டிரைவர் ஆம்புலன்சை இயக்க முயன்ற போது வாகனத்தில் உள்ள ‘கியர்’ திடீரென்று டிரைவரின் கையோடு வந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே நடந்த விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் இயக்க முயன்றார். அப்போது வாகனத்தில் உள்ள ‘கியர்’ திடீரென்று டிரைவரின் கையோடு வந்தது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை தள்ளி ஓரமாக நிறுத்தினர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் டிரைவரே அதனை சரி செய்தார். இதற்கு மற்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களும் உதவி செய்தனர். ஆம்புலன்சின் ‘கியர்’ டிரைவரின் கையோடு வந்ததால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு வரும் வழியில் பழுது ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதான நிலையில் உள்ள அனைத்து 108 ஆம்புலன்சுகளையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.