வேடசந்தூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவன் போலீசார் விசாரணை
வேடசந்தூர் அருகே கிணற்றில் பள்ளி மாணவன் பிணமாக மிதந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன்நகரை சேர்ந்தவர் வீரன். பெயிண்டரான இவர், கோவையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவருடைய மனைவி இறந்து விட்டார். அவருடைய மகன் சவின் (வயது 9). இவன், எரியோடு பாண்டியன்நகரில் தனது பாட்டி பொம்மியம்மாளுடன் தங்கியிருந்து அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான்.
எரியோட்டில் கோட்டைவிநாயகர், முனியப்பசுவாமி கோவில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த முளைப்பாரி ஊர்வலத்துக்கு பக்கத்துவீட்டு சிறுவர்களுடன் சென்ற சவின், பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவனை, பொம்மியம்மாள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று எரியோடு ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கிணற்றில் சவின் பிணமாக மிதந்தான். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவனின் உடலை மீட்டனர்.
மேலும் தகவல் அறிந்ததும் எரியோடு போலீசாரும் அங்கு வந்தனர். பின்னர் அவனுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் குளிக்க சென்றபோது அவன், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.