காணாமல் போன அண்ணன்–தங்கை பண்ணைக்குட்டையில் பிணமாக மீட்பு, போலீஸ் விசாரணை


காணாமல் போன அண்ணன்–தங்கை பண்ணைக்குட்டையில் பிணமாக மீட்பு, போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Jun 2018 3:45 AM IST (Updated: 3 Jun 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

குமுளி அருகே காணாமல் போன அண்ணன்–தங்கை பண்ணைக்குட்டையில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமுளி,

இடுக்கி மாவட்டம் குமுளி ஆனைக்குழி பகுதியை சேர்ந்தவர் அனீஷ். அவருடைய மனைவி இசக்கியம்மா. இவர்களுடைய மகன் அபிஜித் (வயது 8), மகள் லட்சுமி என்ற சீனி (6). இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அபிஜித்தும், லட்சுமியும் வீட்டில் இருந்து மாயமாகினர். இதனால் பதறி போன பெற்றோர் உறவினர்களுடன் சேர்ந்து அவர்களை தேடினர்.

ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அனீஷ், குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். இரவு வரை தேடியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. இதற்கிடையில் அப்பகுதியில் ஏலக்காய் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையில் 2 பேரும் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அண்ணன்–தங்கையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பண்ணைக்குட்டை அமைந்துள்ள இடம் வீட்டில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது.

மேலும் கரடு முரடான பாதை வழியாக தான் அங்கு செல்ல முடியும். அதுமட்டுமின்றி அந்த பண்ணைக்குட்டையில் ஆட்கள் நுழைவதை தடுக்க சுற்று கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதை மீறி அவர்கள் எப்படி பண்ணைக்குட்டைக்குள் சென்றனர்? என்பது மர்மமாக உள்ளது.

எனவே யாரேனும் அவர்களை கடத்தி சென்று கொலை செய்து பண்ணைக்குட்டையில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையில் தனது மகன்–மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அனீஷ் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story