ஈரோட்டில் இடி–மின்னலுடன் பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
ஈரோட்டில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் இரவில் அவ்வப்போது மழை பெய்கிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் அடித்தது. 100 டிகிரியாக வெயில் பதிவானதால் பொதுமக்கள் வெளியில் நடமாட சிரமப்பட்டனர். இந்தநிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 4.25 மணி அளவில் இடி –மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கி, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. மாலை 5 மணி வரை மழை நீடித்தது. இதனால் மழைநீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஓடியது.
ஈரோடு இந்திராநகர் கற்பகம் லே–அவுட் முதல் வீதியில் மழைநீர் அதிகம் ஓடியதால் சாக்கடை கால்வாய் நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதேபோல் கனிராவுத்தர்குளம் முத்துக்கவுண்டன் வீதியில் கடந்த 3 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்களில் இரைத்து வெளியே ஊற்றினர்.
மேலும் ஈரோடு நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு, கொங்காலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். சிலர் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தபடி சென்றதையும் பார்க்க முடிந்தது. இந்த மழையால் நேற்று இரவில் குளிர்ந்த காற்று வீசியது.