திருப்பூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு
திருப்பூரில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 34). இவர் அந்த பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் மற்றும் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். மேலும் பணத்தேவைக்காக சிலர் தங்கள் செல்போன்களை பிரகாஷிடம் அடமானம் வைத்து பணம் பெற்று அதன்பிறகு பணம் கொடுத்து செல்போன்களை திரும்ப வாங்கி சென்றுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனது கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை பிரகாசின் செல்போன் கடையின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு பாதியளவு திறந்து இருந்தது. இதை கவனித்த அந்த பகுதியில் உள்ளவர்கள் பிரகாசுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பிரகாஷ் திருப்பூர் வந்து கடைக்குள் சென்று பார்த்தார். பின்னர் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சப்–இன்ஸ்பெக்டர் சாம் ஆல்பர்ட் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கடைக்குள் வைத்திருந்த 8 பழைய செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. அதில் 4 செல்போன்கள் அடமானம் வைத்து பணப்பெற்றவர்களின் செல்போன்கள் ஆகும். இவற்றின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.
ஆனால் கடைக்குள் இருந்த 4 மடிக்கணினிகள், புதிய செல்போன்கள், மேஜை டிராயரில் இருந்த ரூ.4 ஆயிரம் ஆகியவை திருட்டு போகவில்லை. செல்போனை அடமானம் வைத்து பணம் பெற்றவர்களில் யாராவது பூட்டை உடைத்த தங்களின் செல்போன்களை எடுத்து சென்றார்களா? இல்லை வேறு ஆசாமிகளின் கைவரிசையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட கடைக்கு கைரேகை நிபுணர் வந்து கைரேகைகளை பதிவு செய்தார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இதுகுறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.