ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் ஊழியர் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பெண் ஊழியர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2018 5:00 AM IST (Updated: 3 Jun 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த மற்றொரு பெண் அதிகாரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை

கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மருத்துவ கருவிகளை தயாரிக்க 3 ஆயிரம் சதுரஅடியில் தொழில்கூடம் கட்டினார். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் வரி விதிப்பதற்காக முறைப்படி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார். வரிவிதிக்கப்பட்டால் தான் அந்த கட்டிடம் அங்கீகரிக்கப்படுவதுடன், வங்கிக்கடன் உள்ளிட்டவற்றுக்கு அணுகமுடியும் என்பதால் அனைத்து ஆவணங்களையும் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்தார். இதற்கான கட்டணத்தையும் அவர் செலுத்தினார்.

தொழில்கூடத்தை பார்வையிட்டு, வரி விதித்து, அதற்கான புத்தகத்தை வழங்குவதற்காக மாநகராட்சி உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் (வயது 50), வரி வசூலிக்கும் பெண் ஊழியர் (பில் கலெக்டர்) மாலா ஆகியோர் சிவக்குமாரிடம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அவர், அந்த அளவுக்கு பணம் தரமுடியாது என்றார். ரூ.50 ஆயிரமாவது கொடுத்தால் தான் வரிவிதித்து புத்தகத்தை வழங்கமுடியும் என்று 2 பேரும் கூறினர்.

இதுகுறித்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வடக்கு மண்டல அலுவலகத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அலுவலகத்தில் வரி வசூலிக்கும் ஊழியர் மாலா மட்டும் இருந்தார். அங்கு, உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் இல்லை. அப்போது லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரத்தை சிவக்குமார் மாலாவிடம் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும், களவுமாக மாலாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

ஏற்கனவே ரசாயனம் தடவப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். அங்குள்ள கணினியை ஆய்வு செய்து அதன் விவரங்களை போலீசார் பதிவு செய்தனர்.

லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்ததாக உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பல அதிகாரிகள் அலுவலகத்துக்கு வராமல் திரும்பிச் சென்றுவிட்டனர்.


Next Story