ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா அமைக்க திட்டம்


ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2018 3:15 AM IST (Updated: 3 Jun 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவர பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மரங்கள் மற்றும் புதர்களை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டியில் உள்ள படகு இல்லத்தில் மிதிபடகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் என பல்வேறு விதமான படகுகள் உள்ளன. இதில் சுற்றுலா பயணிகள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உல்லாசமாக படகு சவாரி செய்து மகிழலாம்.

சுற்றுலாபயணிகள் படகுகளில் சவாரி செய்யும்போது ஏரிகரையில் அமைந்து உள்ள மான் பூங்காவில் காணப்படும் கடமான்களையும் கண்டு ரசிக்கலாம். இதுமட்டுமின்றி குழந்தைகளை கவரும் வகையில் பலவிதமான விளையாட்டு உபகரணங்களும் தேனிலவு படகு இல்லத்தில் உள்ளன.

ஊட்டி ஏரியை சுற்றி சுற்றுலா பயணிகள் நடந்து சென்று ஓய்வெடுத்து ரசிக்கும் வகையில், கடந்த 2010–2011–ம் ஆண்டில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ரூ.1½ கோடி செலவில் நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இந்த நடைபாதை ஏரியையொட்டி அமைந்து உள்ளதாலும், நடைபாதை குறுகலாக உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் தவறி ஏரியில் விழும் அபாயம் இருந்தது. இதனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு கருதி நடைபாதையை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடைபாதையை கண்டுகொள்ளவில்லை.

அந்த இடம் சுற்றுலாத்துறையின் கீழ் உள்ளதா?, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?, பொதுப்பணித்துறையின் நீர்வள மேம்பாட்டின் கீழ் உள்ளதா? என்ற பிரச்சினை இருந்து வந்ததால், ஊட்டி படகு இல்லத்தில் பூங்கா மற்றும் நடைபாதையையொட்டி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வில்லை. இதையடுத்து அந்த திட்டத்தை அரசு செயல்படுத்தாமல் பாதியிலேயே கைவிட்டது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட பல இருக்கைகள் உடைந்து விழுந்து கிடக்கிறது. சில இருக்கைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது. மேலும் நடைபாதை இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மரங்கள், புதர்கள் மண்டி காணப்படுகிறது.

அதேபோன்று ஊட்டி படகு இல்லத்தின் வாகன நிறுத்தும் இடத்தை ஒட்டியுள்ள நடைபாதையும் பல லட்ச ரூபாய் செலவில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களுக்காக அந்த இடமும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்போது ஊட்டி ஏரியை சுற்றி உள்ள நடைபாதையை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு வளர்ந்து உள்ள மரங்கள், புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடைபாதையின் ஒருபுறத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தமிழக அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி உள்ளது. அதற்காக நடைபாதை மற்றும் இடத்தை தயார் செய்யும் பணிகள் இப்போதே தொடங்கி விட்டன. சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் படகு இல்லத்துக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயன் தரும் வகையில் நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story