அம்மா உணவகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் செலவு, பா.ஜனதா குற்றச்சாட்டு
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிவகாசி நகராட்சி நிர்வாகம் அம்மா உணவகத்துக்கு மட்டும் மாதந்தோறும் ரூ.5 லட்சம் பொதுநிதியில் இருந்து செலவு செய்கிறது என்று பா.ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிவகாசி,
பா.ஜனதா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாருகாலில் கடந்த சில ஆண்டுகளாக மண் அள்ளப்படாமல் இருக்கிறது. இதனால் லேசான மழை பெய்தாலும் வாருகாலில் மழை நீர் செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் சாலைகளும் சேதம் அடைகிறது.
அதே போல் நகரில் உள்ள கிருதுமால் கால்வாய், மருதநாடார் ஊருணி, பொத்துமரத்து ஊருணி, மணிகட்டி ஊருணிகள் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் அனைத்தும் கழிவுநீருடன் கலந்து செல்கிறது. இதனால் எந்தவித நன்மையும் இல்லை. ஊருணிகளை தூர்வாரினால் மட்டுமே மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். அவ்வாறு சேமித்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பல இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. தீ வைத்து எரிக்கும் நிலை தொடர்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது.
சிவகாசி நகரில் 7 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், 2 இடங்களில் தரைகீழ் தொட்டியும் உள்ளது. இந்த தொட்டிகள் மூலம் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் குடிநீரில் அசுத்தம் கலந்து வருகிறது. நகர பகுதியில் 3 இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளன. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
சிவகாசி நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் புதிய நகராட்சி அலுவலகம் கட்ட ரூ.2 கோடி பொதுநிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் அம்மா உணவகத்துக்கு மாதந்தோறும் ரூ.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது. நகராட்சி பகுதியில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. சிவகாசி நகரில் பல இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வைக்கப்பட்ட எந்திரங்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை. சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு முன்னர் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதே போல் நகராட்சியில் உள்ள பொதுநிதியை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டு உள்ளது.