கச்சநத்தம் கிராமத்தில் மக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை சிவகங்கை கலெக்டர் லதா தகவல்
கச்சநத்தம் கிராமத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா, அங்கு பொதுமக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கச்சநத்தம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் லதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:–
கச்சநத்தம் கிராமத்தில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு அதற்குரிய நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. அங்கு வசிக்கும் கிராம மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றும் வகையில் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் இந்த ஊரியிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு மாதமும் நிரந்தரமாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளது.
மோதல் சம்பவத்தில் இறந்த மற்றும் படுகாயமடைந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கடனுதவிகள் வழங்கி தொழில் தொடங்க கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் இங்குள்ள பொதுமக்களுக்கு 25 சதவீதம் மானிய திட்டத்தில் ஆடு, மாடு வழங்குவதற்கான கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் அத்தியாவசியக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக அரசு பஸ் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு தேவையான அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கச்சநத்தம் கிராமத்தைச் சுற்றியுள்ள பெரிய ஆவரங்காடு, சின்ன ஆவரங்காடு, சுள்ளங்குடி, மாரநாடு, தஞ்சாக்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்பகுதியினை வன்கொடுமையால் பாதிப்படைந்த பகுதி என அறிவித்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இப்பகுதிக்கு தேவையான அரசு திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதியில் முழுமையாக கண்காணிப்பு பகுதிகளை மேற்கொள்ள காவல் துறை முழுமையாக ஈடுபடுவதுடன், இந்த கிராமத்தின் மாரநாடு, கச்சநத்தம் பிரிவில் புறக்காவல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பழனீஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.