முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் சாவு


முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2018 4:00 AM IST (Updated: 3 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென இறந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி,

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அபிதா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் 12-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள வேம்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அபிதாவை அவரது குடும்பத்தினர் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அபிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதன் மூலம் அபிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் அபிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று அபிதா உயிரிழந்தார்.

இதையறிந்ததும் அபிதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். தவறான சிகிச்சை அளித்ததால்தான் அபிதா இறந்துவிட்டதாக கூறி திடீரென அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அபிதாவின் உடலையும் அவர்கள் வாங்க மறுத்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரணி, ராஜன் மற்றும் போலீசார், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அபிதாவின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாக்டர்கள் தரப்பில் அபிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து விளக்கி கூறினர். இதனையடுத்து சமாதானமடைந்த அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு அபிதாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story